என்னைப் பற்றி, நான்…

டென்னிஸ் ஜெகன், ஊர் கன்னியாகுமரி.

படித்தது உயிர்வேதியல், உளவியல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் LLB. 15 வருடத்திற்கு மேல் MNC கம்பெனிகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறேன். பின்னர் அதை விட்டுவிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக வழக்குரைஞராக இருக்கிறேன். 

தமிழ்ப் படைப்பிலக்கிய வளர்ச்சியில் தீவிர இலக்கியத்தைப் போலவே, வெகுஜன இலக்கியத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. அதிலும் குறிப்பாக, சிறுவயதிலிருந்தே crime/ thriller மற்றும் horror கதைகள் மட்டும் தான் எனக்கு பிடிக்கும்… வேறு genre கதைகளை நான் படித்தது கூட கிடையாது.

என் எழுத்தின் ஆரம்ப புள்ளியாக, Paranormal psychologyயில் ஆராய்ச்சி ரீதியிலான ஆர்வம் இருந்ததால், கட்டுரைகள் நிறைய எழுதிருந்தேன். கொரோனா லாக்டவுன் காலகட்டம் முடியும் தருவாயில், “நீ தான் நல்லா கதை சொல்றியே, எழுதினால் என்ன?” என்று நண்பர்கள் தூண்டிவிட… எனக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை இரண்டு வருடங்களுக்கு முன்னால், முகநூலில் எழுத ஆரம்பித்தேன். அது எனக்கு நல்ல வாசகர் வட்டத்தை உருவாக்கி கொடுத்தது.

பணி நிமித்தமாகப் பல இடங்களுக்குச் சென்று, சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. நான் பழகிய மனிதர்களையும், எனக்கு கிடைத்த அனுபவங்களையும், சுற்றியுள்ளோர்க்கும் ஏற்பட்ட அனுபவங்களையும் எழுத ஆரம்பித்தேன். அதன் பிறகு சிறுகதைகள், தொடர்கதைகள் என பிரதிலிபி, முகநூல், டெலிகிராம் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் எழுதினேன். கடந்த இரண்டு வருடங்களில், 30 தொடர்களும் நிறைய சிறுகதைகளும் எழுதிவிட்டேன்.

வெகுஜன ரசனைக்கும், பொழுதுபோக்கிற்கும் தான், நான் எழுதுகிறேன். என் கதைகளில் இலக்கியத்தியோ, நாவல் அமைப்பையோ, கட்டுமானத்தையோ எதிர் பார்க்காதீர்கள். ஏனென்றால் நாடகபாணி, ரேடியோ ஒலி சித்திரம் மற்றும் திரைக்கதை அமைப்பு என கலந்து கட்டி தான் கதை எழுதுகிறேன். ஒரு நாவலை இப்படித்தான் எழுதவேண்டும் என்று அந்த சட்ட திட்டமும் கிடையாது. நாவல் இஷ்டப்பட்டால் தன்னை எப்படி வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளும். படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் குறிக்கோள்.

எழுதுவதால் எதையோ உருவாக்குகிறோம்; எதையோ நோக்கி பயணிக்கிறோம்; எதையோ அடைகிறோம். இந்த பயணம், பிடித்து போய் ஆரம்பித்து இருக்கிறேன்.

இது சிறுவயதில் – என்னவாக ஆகப் போகிறோம் என்கிற தேடல் கொண்டு வந்து சேர்த்த இடம். இன்னமும் தேடலின் வரம்புகளும் வரையறைகளும் விஸ்தரித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

website pic